பொது

பொதுமக்களிடம் நன்கொடைகள் கோரவில்லை - கே.எல் ஜே.எஸ்.பி.டி 

20/03/2026 02:16 PM

கோலாலம்பூர், 20 மார்ச் (பெர்னாமா) -- பொதுமக்களிடம் நன்கொடைகள் கோரி நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்கான அழைப்பிதழை வெளியிட்டதாகக் கூறப்படுவதை, கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை, ஜே.எஸ்.பி.டி மறுத்துள்ளது.

இந்த போலி அழைப்பிதழ் WhatsApp செயலி மூலம் பரவலானதை நேற்று மாலை மணி 5.50-க்கு தங்கள் தரப்பு கண்டறிந்ததாக, கோலாலம்பூர் ஜே.எஸ்.பி.டி தலைவர் ஏ.சி.பி முஹமட் சம்சுரி முஹமட் இசா தெரிவித்தார். 

கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டதாகக் கூறப்படும் அந்த அழைப்பிதழ், அதன் அதிகாரப்பூர்வ கடிதத் தாளில் அச்சிடப்பட்டிருந்ததுடன், “சுப்ரிதெண்டன் ஜாமில் பின் அப்துல்” எனும் நபரால் கையெழுத்திடப்பட்டிருந்ததாக, ஓர் அறிக்கையில் ஏ.சி.பி முஹமட் சம்சுரி விவரித்துள்ளார்.

கோலாலம்பூர் போக்குவரத்துப் பிரிவு உட்பட அரச மலேசிய போலீஸ் படையிலும் சம்பந்தப்பட்ட அப்பெயர் கொண்ட நபர் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். 

எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் நன்கொடைகளைக் கோரும் நோக்கத்துடன் அதிகாரப்பூர்வ கடிதம் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை கோலாலம்பூர் ஜே.எஸ்.பி.டி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பிலான எந்தவோர் உறுதிப்படுத்தலையும் கோலாலம்பூர் ஜே.எஸ்.பி.டி அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் நேரடியாகச் செய்துக் கொள்ளலாம் என்று ஏ.சி.பி முஹமட் சம்சுரி குறிப்பிட்டார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]