பொது

2026 HRA: ஆளில்லா விமானத்தின் மூலம் 2,384 குற்றப்பதிவுகள்

20/03/2026 02:23 PM

கோத்தா பாரு, 20 மார்ச் (பெர்னாமா) -- கடந்த மார்ச் 16-ஆம் தேதி தொடங்கப்பட்ட, 2026 HRA எனப்படும் நோன்புப் பெருநாளுக்கான சோதனை நடவடிக்கை அமலாக்கத்தின் மூன்று நாள்களில், ஆளில்லா விமானத்தின் மூலம் 2,384 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குற்றமும் ஆதாரமாகப் பயன்படுத்தப்படவிருப்பதோடு, சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு விசாரணை அறிவிக்கையை சாலை போக்குவரத்து துறை, ஜே.பி.ஜே வழங்கும் என்று, அதன் அமலாக்க மூத்த இயக்குநர் டத்தோ முஹமட் கிஃப்லி மா ஹசான் தெரிவித்தார். 

இச்சோதனை நடவடிக்கையில் நான்கு முக்கிய குற்றங்கள் அடையாளம் காணப்பட்டதாக டத்தோ முஹமட் கிஃப்லி கூறினார். 

இரட்டைப் பாதைகளில் முந்திச் சென்ற 715 குற்றங்கள், சமிக்ஞை விளக்குகளை மீறிய 627 குற்றங்கள், இடதுபுறமாக முந்தி சென்ற அல்லது வரிசையை முந்தி சென்ற 539 குற்றங்கள் உட்பட அவசர வழித்தடங்களைப் பயன்படுத்திய 503 குற்றங்களே அவை என்றும் அவர் குறிப்பிட்டார். 

"சாலைப் பயனர்கள் சட்டத்தைப் பின்பற்றுவதை உறுதி செய்வதே ஆளில்லா விமான பயன்பாட்டின் முக்கிய நோக்கமாகும். விபத்திற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு குற்றத்தை அவர்கள் செய்தால், விசாரணை செய்வதற்கான அறிவிப்பை நாங்கள் வெளியிடுவோம்," என்றார் அவர். 

கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள கிழக்கு வட்டார ஜேபிஜே கழகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ முஹமட் கிஃப்லி அதனைக் கூறினார்.  

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]