TRANS-PASIFIC கூட்டமைப்பு; இங்கிலாந்தின் பங்கேற்பை மலேசிய அங்கீகரித்தது

20/09/2024 06:42 PM

கோலாலம்பூர், 20 செப்டம்பர் (பெர்னாமா) -- C-P-T-P-P எனப்படும் TRANS-PASIFIC கூட்டமைப்பின் விரிவான முற்போக்கு உடன்பாட்டில் இங்கிலாந்தின் பங்கேற்பை மலேசிய அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

இது இங்கிலாந்து உடனான நாட்டின் முதல் இருவழி தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைக் குறிக்கிறது.

ஓர் ஒப்பந்தத்திற்குக் கட்டுப்படுவதற்கான தனது உடன்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு நாட்டின் வழிமுறை அல்லது செயலை குறிப்பதே அங்கீகார செயல்முறையாகும்.

இதன்வழி, C-P-T-P-P தொகுதியின் ஒருங்கிணைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜி.டி.பி மதிப்பை 154 லட்சக் கோடி அமெரிக்க டாலராக அதிகரித்திருப்பதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு, மித்தி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

அல்லது உறுப்பு நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதுடன் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 விழுக்காடாகவும் இது விளங்குகிறது.

மலேசிய ஏற்றுமதிகள், குறிப்பாக செம்பனை எண்ணையிலான உற்பத்திகள் கொக்கோ, ரப்பர், மின்சாரம் மற்றும் மின்னணுவியல், இரசாயனங்கள் உட்பட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு 94 விழுக்காடு வரி விலக்குகளிலிருந்து பயனடைவதற்கு இந்த அங்கீகார செயல்முறை வழிவகுக்கும் என்று மித்தி விவரித்தது.

2024-ஆம் ஆண்டின் இறுதியில் இங்கிலாந்து மற்றும் இது தொடர்பிலான ஆவணங்களை அங்கீகரித்த நாடுகளுக்கிடையில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]