பொது

துன் அப்துல்லாவுக்கு பிரதமர் இறுதி மரியாதை 

15/04/2025 06:03 PM

கோலாலம்பூர், 15 ஏப்ரல் (பெர்னாமா) - மறைந்த துன் அப்துல்லா அஹ்மட் படாவிக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தேசிய பள்ளிவாசலில் இறுதி மரியாதை செலுத்தினார்.

மதியம் மணி ஒன்று அளவில், அப்பள்ளிவாசலின் பிரதான தொழுகை மண்டபத்திற்கு அவர் வருகையளித்தார்.

விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு, உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ்,  இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முஹமட் நைம் மொக்தார் ஆகியோர் பிரதமருடன் வந்து இறுதி மரியாதை செய்தனர்.

அன்னாரின் குடும்ப உறுப்பினர்களையும் பிரதமர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனிடையே, நேற்றிரவு இயற்கை எய்திய நாட்டின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவியின் குடும்பத்தினருக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேராரசியார் ராஜா ஸாரித் சோஃப்பியா தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டனர்.

நாட்டின் மேம்பாட்டிற்கு அன்னார் ஆற்றிய மகத்தான பங்கிற்கு தாம் நன்றி பாராட்டுவதாகவும் சுல்தான் இப்ராஹிம் தமது முகநூலில் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)