பொது

துன் அப்துல்லாவுக்கு மரியாதை செலுத்த 4 முன்னாள் பிரதமர்கள் வருகை

15/04/2025 06:20 PM

கோலாலம்பூர், 15 ஏப்ரல் (பெர்னாமா) - தேசிய பள்ளிவாசலில் துன் அப்துல்லா படாவிக்கு இறுதி மரியாதை செலுத்த நான்கு முன்னாள் பிரதமர்கள் வருகை புரிந்திருந்தனர்.

அவர்களில், ஆறாவது பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் காலை மணி 10.40-க்கு துன் அப்துல்லாவின் நல்லுடலைக் காண வருகை புரிந்திருந்தார்.

முன்னதாக, துன் அப்துல்லாவிற்க்ஜு இறுதி மரியாதை செலுத்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு அனுமதி அளித்திருந்தது.

அவரைத் தொடர்ந்து, 50 நிமிடங்களில் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டும் நண்பகல் மணி 12.20-க்கு டான் ஶ்ரீ முஹிடின் யாசினும் வருகை புரிந்தனர்.

ஒன்பதாவது பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நண்பகல் மணி 12.34 அளவில் அங்கு வந்தடைந்தார்.

மேலும், சிங்கப்பூர் மூத்த அமைச்சரும் முன்னாள் பிரதமருமான லீ சியான் லூங்கும்  வருகை புரிந்திருந்தார்.

அவர்கள் துன் அப்துல்லாவின் குடும்பத்தினருடன் சில நிமிடங்கள் இருந்தனர்.

தேசிய பள்ளிவாசலின் முதன்மை தொழுமை மண்டபத்தில் நடைபெற்ற இறுதி மரியாதை செலுத்தும் சடங்கு முழுவதிலும் துன் அப்துல்லாவின் நல்லுடலுக்கு அருகில் இருந்தவர்களில் அவரின் மனைவி துன் ஜேன் அப்துல்லா, மகள் நோரி அப்துல்லா, மருமகன் கைரி ஜமாலுடின் ஆகியோரும் அடங்குவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)