பெட்டாலிங் ஜெயா, 24 ஏப்ரல் (பெர்னாமா) -- மதி இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் சேன் ராயன் அப்துல் மாட்டினிற்கு காயங்கள் ஏற்படும் அளவிற்கு அவனை புறக்கணித்ததாக அவனின் பெற்றோர் சைம் இக்வான் சஹாரி மற்றும் இஸ்மானிரா அப்துல் மானாவ் ஆகிய இருவரும் எதிர்நோக்கிய வழக்கிற்கு தீர்ப்பளிக்க ஜூலை 21-ஆம் தேதியை பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட அவ்விருவரும் விடுதலை செய்யப்படுவார்களா அல்லது தற்காப்பு வாதம் புரியும்படி உத்தரவிடப்படுவார்களா என்பது அன்றைய நாளில் தெரிய வரும்.
கடந்த பிப்ரவரி நான்காம் தேதி தொடங்கி நடந்த 20 நாள் விசாரணை முழுவதும் அழைக்கப்பட்ட 28 சாட்சியாளர்கள் அளித்த சாட்சியங்களை கேட்டப் பின்னர் அரசு தரப்பு இன்றோடு இவ்வழக்கை முடித்தைத் தொடர்ந்து அத்தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவ்விருவரும் தற்காப்பு வாதம் புரிவதற்கு உத்தரவிடப்படும் பட்சத்தில் அதே நாள் தொடங்கி ஜூலை 24-ஆம் தேதி வரை அதன் வழக்கு விசாரணை நடைபெறும் என்று நீதிபதி டாக்டர் ஷாலிசா வார்னோ தெரிவித்தார்.
இரு தரப்பினரிடமிருந்தும் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்ய மே 23-ஆம் தேதியையும், எதிர் சமர்ப்பிப்புகளுக்கு ஜூன் 6-ஆம் தேதியையும் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]