அரசியல்

துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இசா போட்டி

09/05/2025 06:54 PM

புத்ராஜெயா, 09 மே (பெர்னாமா) -- இவ்வாண்டு, கெஅடிலான் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக நூருல் இசா அன்வார் உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

இந்த முடிவு சுயநலத்திற்காக அல்ல.

மாறாக, கட்சி மீதான பொறுப்பின் அடிப்படையில் உருவானது என்று, தமது முகநூலில் நூருல் இசா தெரிவித்துள்ளார்.

தாம் போட்டியிடுவதால், 'குடும்பக் கட்சி' எனும் உள்ளுணர்வை மேலும்  வலுப்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.

மாறாக, அடித்தள மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெளிப்படையான தேர்தல் செயல்முறையே, கெஅடிலானின் ஜனநாயகக் கொள்கையின் உண்மையான அடித்தளம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு முன்னதாக, எந்த அமைச்சர் பதவியையும் தான் ஏற்றுக்கொண்டதில்லை என்றும், 2018-ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அமைச்சர் பதவி வழங்கப்பட்ட போதிலும் அதை நிராகரித்ததாகவும் நூருல் இசா தெளிவுப்படுத்தினார்.

இதனிடையே, இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலில், துணைத் தலைவர் பதவியைத் தாம் தற்காத்து போட்டியிடுவதாக, டத்தோ ரஃபிசி ரம்லி உறுதிப்படுத்தியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)