கோலாலம்பூர், அக்டோபர் 09 (பெர்னாமா) -- நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் , நேர்மை, ஊழல் எதிர்ப்பு மற்றும் நாடு முழுவதும் உள்ள அமலாக்க நிறுவனங்களின் பங்கை வலுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
ஊழல் மற்றும் தேசிய நிதி கசிவை எதிர்த்துப் போராடுவதில் அனைத்து அமலாக்க நிறுவனங்களும் ஒன்றிணைந்து விரிவாகச் செயல்படுவதை உறுதி செய்ய இது அவசியம் என்று எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
''நமது நாட்டில் நேர்மை, ஊழல் மற்றும் அமலாக்க நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற விவகாரங்களில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். எஸ்.பி.ஆர்.எம் மட்டுமல்ல, மற்ற அமலாக்க நிறுவனங்களும் ஒன்றாகச் செயல்பட வேண்டும். நாங்கள் ஒன்றாக அரசாங்கப் பணத்தைத் திருப்பித் தருவோம். அதனால்தான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எஸ்.பி.ஆர்.எம் கசிவைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதாக அறிவித்தேன்,'' என்று அவர் தெரிவித்தார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் டான் ஶ்ரீ அசாம் பாக்கி உரையாற்றினார்.
இந்த ஆண்டு, ஊழலை முறையாகவும் திறம்படவும் எதிர்த்துப் போராடுவதற்கான எஸ்.பி.ஆர்.எம்-இன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டிற்கு இணங்க, இழந்த அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்ட பொது நிதியை மீட்டெடுக்கும் முயற்சிகளில் எஸ்.பி.ஆர்.எம் கவனம் செலுத்துவதாக அவர் விவரித்தார்.
2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை மக்களவையில் தாக்கல் செய்யவிருக்கிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)