பொது

தைவான் பெண் மரணம்; நமாவியின் தடுப்புக் காவல் மேலும் 3 நாள்களுக்கு நீட்டிப்பு

10/11/2025 05:40 PM

கோலாலம்பூர், 10 நவம்பர் (பெர்னாமா) -- சமூக ஊடகப் பிரபலமான தைவான் பெண் ஒருவரின் மரணம் தொடர்பிலான விசாரணைக்கு உதவும் பொருட்டு, இயக்குநரும் சர்ச்சைக்குரிய பாடகருமான 42 வயதான நேம்வீ என்று நன்கறியப்பட்ட வீ மெங் சே-வின் தடுப்புக் காவல் வரும் வியாழக்கிழமை வரை மேலும் மூன்று நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  

நவம்பர் 13-ஆம் தேதி வரை அத்தடுப்புக் காவலை நீட்டிக்கும் விண்ணப்பத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மர்சுஸ் தெரிவித்தார். 

சியே யுன் சின் என்று அறியப்படும் அப்பெண்ணுடன் இறுதியாக இருந்தது இசைக் கலைஞரான நேம்வீ என்பதால் அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை மிகவும் முக்கியமானது என்றும், அந்நபர் கடந்த புதன்கிழமை தாமாகவே முன்வந்து சரணடைந்ததாகவும் முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.  

கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள தங்கும் விடுதி ஒன்றின் குளியலறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அப்பெண்ணின் உடல் கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

அப்பெண்ணின் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நச்சுயியல் பகுப்பாய்விற்காக போலீசார் இன்னும் காத்திருக்கின்றனர்.

தொடக்கத்தில் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்ட இவ்வழக்கு, தற்போது குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் கொலை வழக்காக மீண்டும் விசாரிக்கப்படுகிறது.

--பெர்னாமா
    
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]