புதுடெல்லி, 10 நவம்பர் (பெர்னாமா) -- இந்திய தலைநகர் புதுடெல்லியில் கடந்த சில தினங்களாக மோசமடைந்து வரும் காற்றுத் தூய்மைக்கேட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை நூற்றுக் கணக்கானோர் புதுடெல்லியின் வீதிகளில் ஆட்சேப மறியல் நடத்தினர்.
இதற்குத் தீர்வு காணும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி இந்தியா கேட் வார் நினைவகத்தில் ஒன்று கூடியிருந்த போராட்டக்காரர்களைப் போலீசார் அதே இடத்தில் கைது செய்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.
புதுடெல்லி மட்டுமின்றி அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆண்டும்தோறும் காற்றின் தரம் மாசுபாடு அடைந்து வருவது ஒரு பிரச்சனையாக நீண்டு வருகிறது.
நேற்றிரவு நடைபெற்ற மறியலின் போது நகரத்தின் பெருகி வரும் சுகாதார நெருக்கடியின் அடையாள நினைவூட்டல்களான மருந்துச்சீட்டுகள் மற்றும் சுவாச உதவிக் கருவிகளைப் பலர் கையில் ஏந்திச் சென்றனர்.
மறியலுக்காக முன் அனுமதி பெறாததைச் சுட்டிக்காட்டி போலீசார் அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் சிறியவர்கள் பெரியவர்கள் என்று சுமார் நூற்றுக்கணக்கானோரைக் கைது செய்தனர்.
போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்தது.
ஆனால் தாங்கள் தாக்கப்பட்டதாகச் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் புகார் கூறியுள்ளனர்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)