பொது

ஐந்தாண்டுகளில் சபா சிறுவர் கல்வி வளர்ச்சிக்கு 102 கோடி ரிங்கிட் நிதி

23/11/2025 05:28 PM

கோலாலம்பூர், 23 நவம்பர் (பெர்னாமா) -- 2021ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரையில் மாநிலத்தில் உள்ள நான்கு லட்சத்து 82,178  சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, சபா மாநில அரசாங்கம், 102 கோடி ரிங்கிட் நிதியை வழங்கியுள்ளது.

இளைய தலைமுறையினர் மாநிலத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமான சொத்து என்பதைக் கருத்தில் கொண்டு, தமது தலைமையிலான அரசாங்கம் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அம்மாநில முதலமைச்சர்  டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தெரிவித்தார். 

''சபா மாநிலம் வளர்ச்சி காண வேண்டுமெனில், இளைஞர்கள் மீது முறையாக முதலீடு செய்ய வேண்டும். நமது மக்கள் புத்திசாலிகளாகவும், விவேகமானவர்களாகவும், பல்வேறு திறன்களைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதனால் அவர்கள் தங்கள் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக தங்கள் பங்களிப்பை வழங்க முடியும். இப்போது நாம் செய்வது அவர்களின் எதிர்காலத்திற்காக, எனவே இளைஞர்களிடம் முதலீடு செய்வது மிகவும் அவசியமானது'',.
என்றார் அவர்.

சபா, கோத்தா கினபாலு, செரி காயாவில் பெர்னாமாவுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் டத்தோ ஸ்ரீ ஹாஜிஜி அவ்வாறு கூறினார்.

மாநில அரசாங்கம் வழங்கும் கல்வி உதவிகளில், சபா மாநில கல்வி நிதி, சபா மாநில அரசு உதவித்தொகை, சிறப்பு கடமைகளுக்கான துணை மாநில செயலாளர் அலுவலகத்தின் கல்வி உதவி, சபா அறக்கட்டளை உதவி, சபா இஸ்லாமிய மத மன்றத்தின் கல்வி உதவி மற்றும் சபா மாநில தொண்டு நிறுவனம் ஆகியவை அடங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதே காலக்கட்டத்தில், சபா மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்க்கல்வி பதிவுக்கான ரொக்க பண உதவி, சிறப்புத் தேர்வு ரொக்க பண உதவி, கணினி உதவி மற்றும் விமான டிக்கெட் உதவி தொகை உள்ளிட்ட 14 கல்வி தொடர்பான உதவிகளும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதை ஹஜிஜி நோர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)