புத்ராஜெயா, டிசம்பர் 05 (பெர்னாமா) -- நாட்டின் பல்வேறு சீரூடை இயக்கங்கள் மற்றும் இசைக் குழுக்களின் பங்கேற்புகளோடு Rancakkan MADANI Bersama Malaysiaku எனும் நிகழ்ச்சி இன்று காலை 8 மணிக்கு புத்ராஜெயா வளாகத்தில் கோலாகலமாக தொடங்கியது.
மடானி அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மூன்று நாள்கள் நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்க பொது மக்கள் உற்சாகமாக காத்திருப்பது பெர்னாமா தொலைகாட்சி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.
மடானி இளைஞர் பிரிவு, மடானி மக்களின் தயாரிப்பு, மடானி மக்கள் நல்வாழ்வு, மடானி மக்களின் சகோதரத்துவம், மடானி விற்பனை, மலேசியாவிற்கு வருகை தரும் 2026 ஆண்டு, ஆசியான் தலைமைத்துவம் மற்றும் மடானி அரச தந்திரம் என எட்டு பிரிவுகளில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதோடு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெறும் பொதுச் சேவை சீர்திருத்தத்திற்கான தேசிய மாநாட்டில் 34 அமைச்சுகள், நிறுவனங்கள் மற்றும் துறைகளின் நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
மேலும், மோட்டார் சைக்கிள் இயந்திர எண்ணெய் மாற்றுவது, 5,500 இலவச மோட்டார் சைக்கிள் தலைகவசங்கள் மற்றும் அடையாள அட்டை மாற்றும் சேவையும் இதில் இடம்பெற்றுள்ளன.
இது தவிர, இந்த நிகழ்ச்சியில் அதிக இளைஞர்களைப் பங்கேற்க வைப்பதற்காக அவர்களை ஈர்ப்பதற்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
மூன்று நாள்களுக்கு நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் சுமார் மூன்று லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதன் நிறைவு விழாவில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ளவுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)