பொது

மடானி அரசாங்கத்தின் புதிய அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

17/12/2025 03:39 PM

இஸ்தானா நெகாரா, டிசம்பர் 17 (பெர்னாமா) -- மடானி அரசாங்க அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து இரண்டு புதிய நியமனங்கள் உட்பட அமைச்சர்கள் மொத்தம் எழுவர் இன்று இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

காலை மணி 10 அளவில் சிங்கஹசன கேசில் வளாகத்தில் நடைபெற்ற நியமனக் கடிதங்கள் வழங்குதல் பதவி உறுதிமொழி மற்றும் ரகசியக் காப்பு ஆகிய சடங்கில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் கலந்து கொண்டார்.

அதே நேரத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட எட்டு துணை அமைச்சர்களும் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பதவி உறுதிமொழி மற்றும் அதிகாரப்பூர்வ நியமன ஆவணங்களில் கையெழுத்திடும் நிகழ்வுடன் தொடங்கிய அச்சடங்கை தலைமை நீதிபதி டத்தோ ஶ்ரீ வான் அஹமட் ஃபரிட் வான் சாலேவும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர்ரும் பார்வையிட்டனர்.

பதவியேற்புச் சடங்கில் அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.

முன்னதாகத் துணையமைச்சராக இருந்த டத்தோ ஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப் அமைச்சர்கள் குழுவில் முதலில் வந்து இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சராகப் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து டத்தோஸ்ரீ டாக்டர் நோரைனி அஹ்மத் தோட்ட மற்றும் மூலப்பொருள் அமைச்சராகவும் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் மனிதவள அமைச்சராகவும் அக்மல் நஸ்ருல்லா முஹமட் நசீர் பொருளாதார அமைச்சராகவும் பதவியேற்றனர்.

இதனைடையே இரண்டாம் குழுவில் சபா மற்றும் சரவாக்கிற்கான பிரதமர் துறை அமைச்சராகப் புதிய நியமனமான டத்தோ முஸ்தபா சக்முத் முதலில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து, டாக்டர் சுல்கிஃப்லி ஹசான் மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சராகவும் புதிய நியமனமாக டாக்டர் முஹமட் தௌஃபிக் ஜோஹாரி இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராகவும் பதவியேற்றனர்.

துணை அமைச்சர்களின் முதல் குழுவில், முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை துணை அமைச்சராக சிம் ட்சே ட்சினும் பொருளாதார துணை அமைச்சராக டத்தோ முஹமட் ஷஹர் அப்துல்லா பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

அவர்களைத் தொடர்ந்து, யுவனேஸ்வரன் ராமராஜ் தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சராகவும் இளைஞர் மற்றும் விளையாட்டு துணை அமைச்சராக மோர்டி பிமோல் பதவியேற்றனர்.

துணை அமைச்சர்களுக்கான இரண்டாம் குழுவில் சையத் இப்ராஹிம் சையத் நோஹ், சியூ சூன் மேன், டத்தோ லோ சு ஃபூய், மர்ஹாமா ரோஸ்லி ஆகியோர் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)