ஷா ஆலம், ஜனவரி 05 (பெர்னாமா) -- கோலா லங்காட், பந்திங் பகுதியில் நேற்றிரவு துரித உணவகம் ஒன்றில் ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து இரவு 11.05 மணிக்குத் தங்கள் தரப்பிற்குத் தகவல் கிடைத்ததாகக் கோலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டென்ட் முஹமட் அக்மல்ரிசால் ராட்சி கூறினார்.
MERS 999 என்ற எண்ணிலிருந்து கோலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் மாவட்ட கட்டுப்பாட்டு மையம் தகவலைப் பெற்றதாகவும் சம்பவத்தில் 30 வயதிற்குட்பட்ட ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் முஹமட் அக்மல்ரிசால் ராட்சி குறிப்பிட்டிருந்தார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
உணவகத்தின் தரையில் சிதறிக் கிடந்த தோட்டாக்களுக்கு மத்தியில் ஆடவர் ஒருவர் மயங்கி கிடக்கும் காணொளி முன்னதாகச் சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.
இதனிடையே அங்குள்ள துரித உணவகம் மற்றும் கடைகளுக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் அச்சம்ப்வத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)