கோலாலம்பூர், 04 மே (பெர்னாமா) -- இம்மாத இறுதியில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு பொது சேவை துறை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் செயல்முறை மற்றும் பள்ளி மாணவர்களுக்கான இல்லிருப்பு கற்றல் கற்பித்தல் அமலாக்கம் தொடர்பிலான பரிந்துரை குறித்து அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை.
இவ்விவகாரம் குறித்து, இரு வாரங்களுக்கு முன்பதாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், விஸ்மா புத்ராவில் உள்ள ஆசியான் செயலகம் இது தொடர்பில் துல்லியமான ஆய்வை மேற்கொண்டு வருவதாகவும் மடானி அரசாங்க பேச்சாளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெறும் இடங்களில் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணிபுரிபவர்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. இந்த உச்சநிலை மாநாடு மே மாத இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்,'' என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூர், IWK ஈக்கோ பார்க்கில் நீரிழிவு ஒரு தடையல்ல எனும் தலைப்பில் மலாயா பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் செய்தியாளர்களிடம் பேசினார்.
இல்லிருப்பு கற்றல் கற்பித்தல் தொடர்பிலான தகவல்களுக்கு கல்வி அமைச்சரையும், பொது சேவை துறை தொடர்பிலான தகவல்களுக்கு அதன் தலைமை இயக்குநரையும் நாடலாம் என்று ஃபஹ்மி குறிப்பிட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]