கோலாலம்பூர், 07 அக்டோபர் (பெர்னாமா) -- 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட சட்ட மசோதா அல்லது 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் முதலாம் வாசிப்பிற்காக இன்று மக்களைவில் தாக்கல் செய்தார்.
இச்சட்ட மசோதா, 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கச் சேவைகள் மற்றும் செலவுகளுக்கு ஒருங்கிணைந்த நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைப் பயன்படுத்த அனுமதிக்கும்.
இன்று மக்களவையில், வாய்மொழி கேள்வி பதில் நேரத்திற்குப் பின்னர், இச்சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதோடு, இரண்டாம் வாசிப்பிற்காக வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அச்சட்ட மசோதாவை பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்யவிருக்கிறார்.
இரண்டாவது வாசிப்பில், அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் நிதி நிலைமை மற்றும் உத்தி குறித்து விவரிக்கப்படும்.
2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான கொள்கை அளவிலான விவாதம் அக்டோபர் 13 லிருந்து 28ஆம் தேதியும், அமைச்சர் விவாதத்தை நிறைவு செய்து வைப்பது அக்டோபர் 29-இல் இருந்து நவம்பர் 4ஆம் தேதி வரையும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)